திமுக விட்டுச்சென்ற 10 லட்சம் கோடி கடன்; வட்டி கட்டவே சரியா இருக்கும் – அமைச்சர் ரஞ்சித்குமார்

0
7

முந்தைய திமுக ஆட்சியில் விட்டுச் செல்லப்பட்ட 10 லட்சம் கோடி ரூபாய் கடனை முதலமைச்சர் விஜய் மிகத் திறம்படக் கையாண்டு வருவதாகவும், தற்போது அந்தப் பெருங்கடனுக்கு வட்டி கட்டுவதற்கே சரியாக இருக்கிறது என்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்தியாளர்களிடம் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்று நேரில் வருகை தந்த வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார், அங்குள்ள பல்வேறு பிரிவுகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் உள்ள பொதுக் கழிவறைகளுக்கு நேரடியாகச் சென்று தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த அவர், அங்கு வந்திருந்த பார்வையாளர்களிடம் நேரில் கலந்துரையாடிக் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, பூங்காவில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களின் தரம் மற்றும் விலங்குகளின் பராமரிப்பு முறைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்த அமைச்சர், அங்குள்ள கம்பீரமான வெள்ளைப் புலி ஒன்றிற்கு ‘நிலவன்’ என்று பிரியமோடு பெயரிட்டு அழைத்து அதைப் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரஞ்சித்குமாரிடம், ‘தமிழக முதல்வர் விஜய் டெல்லிக்குச் சென்றபோதும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை, இதுவரை அவர் ஏன் செய்தியாளர்களைச் சந்திக்கவே இல்லை?’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குச் சற்றே வேகம் காட்டிய அமைச்சர், “தமிழ்நாட்டின் முதல்வரைப் பற்றியெல்லாம் நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது சார். முதலமைச்சருக்குப் பல்வேறு அரசுப் பணிகளும், மக்கள் பணிகளும் குவிந்து கிடக்கின்றன; அதனை அவர் கவனித்து வருகிறார். முந்தைய திமுக அரசு விட்டுச் சென்ற 10 லட்சம் கோடி ரூபாய் கடனை முதலமைச்சர் விஜய் தற்போது திறம்படக் கையாண்டு வருகிறார். இப்போது அந்தப் பழைய கடனுக்கு வட்டி கட்டுவதற்கே அரசுக்குச் சரியாக இருக்கிறது” என்று அதிரடி விளக்கமளித்தார்.

மேலும், பூங்காவின் தற்போதைய நிலை மற்றும் ஊழியர்களின் போராட்டம் குறித்துப் பேசிய அவர், “இந்தியாவிலேயே முதன்மையான மற்றும் மிகப்பெரிய பூங்காவான வண்டலூருக்கு ஆண்டுதோறும் 13.78 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இப்பூங்கா நஷ்டமின்றி, அரசுக்கு மிகுந்த லாபகரமாகவே இயங்கி வருகிறது. ஊழியர்களின் போராட்டத்தால் பூங்காவின் அன்றாடப் பணிகள் எதுவும் முடக்கப்படவில்லை. புதிய அரசு பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதமே ஆவதால், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றப்படும். பூங்காவில் விலங்குகள் காணாமல் போனால் அதிகாரிகள் முறையாகத் தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

தொடர்ந்து, ஈரோடு அருகே யானை மிதித்து நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த அமைச்சர், காப்புக்காட்டுப் பகுதிகளில் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்கத் தவறிய வனத்துறையின் மெத்தனப் போக்கை மறைக்க முயன்றார். வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதைத் தடுக்க முறையான பாதுகாப்பு வேலிகள் ஏன் அமைக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியபோது, “பொதுமக்களுக்கு வனத்துறை சார்பில் எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலும், அவர்கள் காட்டுக்குள்ளே போகிறார்கள். ‘மனிதனாகப் பார்த்து திருந்தாவிட்டால் ஒன்னும் செய்ய முடியாது’…” என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற தத்துவப் பாடலைப் பாடி, ஒட்டுமொத்தப் பழியையும் பொதுமக்கள் மீதே தூக்கிப் போட்டுத் தப்பிக்கப் பார்த்தார் அமைச்சர். நிறைவாக, வண்டலூர் பூங்காவின் பராமரிப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் பொதுமக்கள் தாராளமாகத் தங்களுக்குத் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் ரஞ்சித்குமார் இந்த ஆய்வின் போது கேட்டுக்கொண்டார்.