தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்தவொரு கறையுமற்ற தூய்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் விஜய் அவர்களின் முதன்மை நோக்கம் என்றும், அதனடிப்படையில்தான் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தவெக அரசின் ஒருமாத கால ஆட்சிப் பணிகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்துப் பல்வேறு முக்கிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நிர்வாகத்தில் தவறுகள் எங்கு நடந்தாலும், அதனை யாராவது சுட்டிக்காட்டுகின்ற பொழுது எந்தவித தயக்கமும் இன்றி அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் இனி ‘ஊழல்’ என்ற வார்த்தைக்கே இடமிருக்கக் கூடாது என்பதில் அரசு மிகக் கறாராக இருக்கிறது. லஞ்ச ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எங்காவது அவ்வாறு முறைகேடுகள் நடப்பதாகத் தகவல்கள் வந்து, அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டப்படியான ஆக்ஷன் பாயும்” என்று எச்சரித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய சொத்துவரி மற்றும் குப்பை வரி உயர்வு குறித்த கேள்விக்கு, அது உள்ளாட்சித் துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் வரும் விவகாரம் என்பதால், அவரிடம் கேட்டால் அதற்குரிய சரியான பதிலை அவர் அளிப்பார் என்று சுமுகமாகத் தவிர்த்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அசுர வளர்ச்சி மற்றும் தேர்தல் வெற்றி குறித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழ்நாட்டிலும் இந்திய அரசியல் வரலாற்றிலும் ஒரு புதிய இயக்கம் தொடங்கப்பட்டு, வெறும் இரண்டே ஆண்டுகளிலேயே பணநாயகத்தை முற்றிலுமாக முறியடித்து விட்டு, தூய்மையான ஜனநாயகத்தை இங்கு உருவாக்கியிருக்கிறோம். இன்றைய முதலமைச்சராகவும், என்றென்றைக்கும் மக்களின் முதலமைச்சராகவும் இருக்கப் போகின்ற தளபதி விஜய் அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் வாரி வழங்கி இருக்கும் இந்த மகத்தான வாக்குகள் என்பது இன்றல்ல, அவர் மக்கள் பணியைத் தொடங்கிய அன்றே மனதாரத் தீர்மானிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்டது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நிறைவாக, வருவாய்த்துறையின் வரவினம் மற்றும் செலவினங்கள் தொடர்பான நிதி நிலைமைக் கேள்விக்கு பதிலளித்த அவர், “புதிய அரசு பொறுப்பேற்று இன்னும் முழுமையாக ஒரு மாதம் கூட நிறைவடையவில்லை. வருவாய் துறையைப் பொறுத்தவரையில் முறையான ஆய்வு நடத்தி சரியான புள்ளிவிவரங்களைச் சொல்வதற்கு இன்னும் ஒரு மாத காலமாவது அவகாசம் தேவைப்படும்; தற்பொழுது அதற்கான புள்ளிவிவரங்கள் கையில் இல்லை. இருப்பினும், வருவாய்த்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் தங்களின் நிலப் பட்டா தொடர்பான விஷயங்களில் ஏதேனும் தவறுகளோ அல்லது அநீதியோ ஏற்பட்டால், எவ்வித பயமுமின்றி நேரடியாகவே அரசின் கவனத்திற்குத் தாராளமாகக் கொண்டு வரலாம். அதற்குரிய உடனடி தீர்வு காணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார். இச்சந்திப்பின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எவ்வித பதிலும் அளிக்காமல் கடந்து சென்றார்.





