புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை 11-வது நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மனித மேம்பாட்டுக் கட்டமைப்பு தொடர்பான 4 முக்கியத் துறைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் விவாதிக்கப்படவுள்ளது.
புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (ஜூன் 12) 11-வது நிதி ஆயோக் (NITI Aayog) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் நாட்டின் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் (கவர்னர்கள்) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தேசிய வளர்ச்சி மற்றும் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து விவாதிக்கும் இந்த முக்கிய அமர்வில், இம்முறை மனித மேம்பாட்டுக் கட்டமைப்பு (Human Development Infrastructure) தொடர்பான 4 முக்கியத் துறைகள் குறித்து மிக விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் தங்களது மாநிலத் திட்டங்கள் மற்றும் நிதித் தேவைகள் குறித்த கோரிக்கைகளை இந்த மேடையில் முன்வைக்க டெல்லி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“வளர்ச்சியடைந்த இந்தியா @2047” (Viksit Bharat @2047) என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இக்கூட்டத்தில் மின்னணு பொதுக் கட்டமைப்பு (DPI), வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பரவலாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான செயல்முறை வரைபடம் தயாரிக்கப்பட உள்ளது. மேலும், கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தேசியத் தலைமைச் செயலாளர்கள் மாநாட்டின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறித்தும், மத்திய-மாநில அரசுகளின் கூட்டுறவு நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு, குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகள் நிர்ணயிக்கப்பட உள்ளன.













