செங்கல்பட்டு இளைஞர் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே, ஒரு நிமிடத்தில் 117 முறை ஷோல்டர் டாப்ஸ் (Shoulder Taps) உடற்பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளார். இவரது விடாமுயற்சியை அங்கீகரித்து இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் வசித்து வரும் ஆனந்த், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கணினி முன்பு அமர்ந்து வேலை செய்யும் பணிச்சூழலுக்கு இடையிலும் உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் கொண்டிருந்த இவர், ஷோல்டர் டாப்ஸ் எனும் கடினமான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இதன் பலனாக, ஒரு நிமிடத்தில் 117 முறை ஷோல்டர் டாப்ஸ் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு அதிகாரப்பூர்வ உலக சாதனை விருதை வழங்கியுள்ளது.
தனது சாதனையைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பனை நேரில் சந்தித்த ஆனந்த், தான் பெற்ற விருது மற்றும் சான்றிதழ்களைக் காண்பித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட ஆட்சியரும் அவரது முயற்சியையும் சாதனையையும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், “இந்தச் சாதனையைப் படைத்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இந்தச் சாதனையைச் செய்த ஒரே நபர் நான்தான் என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். இந்த இலக்கை அடைவதற்காகச் சுமார் 6 முதல் 8 மாதங்கள் இடைவிடாமல் தீவிரப் பயிற்சி மேற்கொண்டேன். தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். உடலை முழுமையான ஃபிட்னஸுடன் வைத்திருந்தால் மட்டுமே இதுபோன்ற கடினமான உலக சாதனைகளைப் படைக்க முடியும்” என்றார்.
ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் நேரமின்மை காரணமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழலில், தனது பணிக்கு இடையே நேரத்தைச் சரியாக நிர்வகித்து அதிகாலைப் பயிற்சியின் மூலம் உலக சாதனை படைத்துள்ள ஆனந்தின் முயற்சி கவனம் பெற்றுள்ளது. விடாமுயற்சி, தொடர் பயிற்சி மற்றும் நேர மேலாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இவரது சாதனைப் பயணம் தமிழக இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
#செங்கல்பட்டு #ஆனந்த் #உலகசாதனை #ஷோல்டர்டாப்ஸ் #தமிழகஇளைஞர் #உடற்பயிற்சி #விடாமுயற்சி #அதிகாலைபயிற்சி #சர்வதேசசாதனை #இன்டர்நேஷனல்புக்ஆஃப்ரெக்கார்ட்ஸ் #Chengalpattu #Anand #WorldRecord #ShoulderTaps #TamilNaduYouth #Fitness #InternationalBookOfRecords #FitnessAchievement #MorningWorkout #YouthInspiration












