செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பேருந்து ஓட்டுநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரைப் பணி இடைநீக்கம் செய்யப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த மனோகரன் (50), கிளாம்பாக்கத்தில் இயங்கும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் (MTC) பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குப் பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மேலும், தைலாவரம் வள்ளலார் நகரில் உள்ள அங்காளம்மன் கோவில் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஒருவரது வீட்டிற்குச் சென்ற மனோகரன், அங்கிருந்த 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, மனோகரனைக் கைது செய்த போலீசார், அவரைச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் அவரைச் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஓட்டுநர் மனோகரனைத் துறை ரீதியாகப் பணி இடைநீக்கம் (Suspension) செய்யக் கோரி, சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாண்மை அலுவலருக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் 3 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#கூடுவாஞ்சேரி #போக்சோ #போக்சோசட்டம் #அரசுப்பேருந்து #பேருந்துஓட்டுநர் #கைது #கிளாம்பாக்கம் #செங்கல்பட்டு #குற்றச்செய்தி #தமிழகசெய்திகள் #Guduvanchery #POCSO #POCSOAct #BusDriver #Arrest #Kilambakkam #Chengalpattu #CrimeNews #TamilNaduNews












