Advertisement

“என் பெயரைச் சொல்லி மாமூல் கேட்டால் கட்டி வையுங்கள்; உடனே எனக்குப் போன் பண்ணுங்க!” – எம்எல்ஏ தியாகராஜன் பேச்சு!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் விழாவில், தனது பெயரைப் பயன்படுத்தி யாராவது மாமூல் கேட்டால் அவர்களைக் கட்டி வைத்துவிட்டுத் தனக்கு உடனே போன் செய்யுமாறு எம்எல்ஏ தியாகராஜன் பேசியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. தவெக ஒன்றிய பொறுப்பாளர் ரவிக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகைகளையும் வழங்கிச் சிறப்பித்தார்.

Advertisement

பின்னர் இந்த விழாவின் மேடையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், “என்னைத் தினசரி ஏராளமான பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வந்து சந்தித்துச் செல்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாகச் சிலர் எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி (Miss use) வெளியில் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வாரம் கூட எனது பெயரைப் பயன்படுத்தி இது போன்ற ஒரு தவறான செயலில் சிலர் ஈடுபட முயன்றனர். அது உடனடியாக எனது கவனத்திற்கு வந்ததால், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து மக்களுக்குத் தைரியம் அளிக்கும் வகையில் பேசிய அவர், “இனிமேல் எனது பெயரைச் சொல்லி உங்களிடம் யாராவது மாமூல் கேட்டாலோ அல்லது பணம் பறிக்க முயன்றாலோ, அவர்களுக்கு அஞ்சாமல் அங்கேயே வைத்து அவர்களைக் கட்டிப் போடுங்கள். உடனடியாக 8072181863 என்ற எண்ணிற்கு எனக்குப் போன் செய்து தகவல் கொடுங்கள். நான் அடுத்த கணமே அந்த இடத்திற்கு நேரடியாக விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்தார்.

Advertisement

தனது பெயரைப் பயன்படுத்தி யாரும் தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினரின் இந்த நேரடிப் பேச்சு, அப்பகுதிப் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement