வரவிருக்கும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்துச் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை 10 அமைச்சர்கள் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சட்டமன்றப் பேரவைத் தலைவர் அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கை தனியாகத் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில், நாளை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் உட்படப் பல்வேறு முக்கியத் துறைகளைச் சார்ந்த 10 அமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்
பல்வேறு அரசுத் துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதிப் பங்கீடுகள். மகளிர், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள்.மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கான உத்திகள் மற்றும் வருவாய் பெருக்கும் வழிகள். துறை வாரியாக வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய முன்னுரிமைத் திட்டங்கள். ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
அமைச்சர்களின் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தயாரிக்கப்பட்ட இறுதி பட்ஜெட் வரைவு அறிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.













