Advertisement

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு… ஜேசிபி உடன் களத்தில் இறங்கிய அதிகாரிகள்… பதற்றமான சூழலில் பாலாறு பகுதி!

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பாலாறு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட குடிசைகளை வருவாய்துறையினர் அதிரடியாக அகற்றினர்.

திம்மாவரம் பகுதியைச் சேர்ந்த சிலர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாறு அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் 50-க்கும் மேற்பட்ட குடிசைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு வருவாய்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு குடிசை அமைத்தவர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.

Advertisement

ஆனால், அறிவுறுத்தலுக்கு பின்னரும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், இன்று செங்கல்பட்டு வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும், செங்கல்பட்டு நகர காவல் நிலையம், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம், பாலூர் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடிசைகள் அகற்றப்பட்டு, அரசுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.

Advertisement

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள ஆலப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த குடும்பங்களுக்காக திம்மாவரம் பாலாறு பகுதியில் வீடுகள் கட்டித் தர அரசு திட்டமிட்டிருந்த நிலையில், சிலர் முன்கூட்டியே அந்த நிலத்தை ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்திருந்ததாக தெரிவித்தனர்.

அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை திடீரென மேற்கொள்ளப்பட்டதால், திம்மாவரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement