Advertisement

கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் ஆம்னி பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கட்டாயமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2024 ஜனவரி 22ஆம் தேதி, சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகள் நுழையக் கூடாது என்றும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும் மாநில போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இந்த உத்தரவுக்கு எதிராக பல தனியார் பேருந்து நிறுவனங்களும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி புதிய பேருந்து முனையத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பே மாநில போக்குவரத்து ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

மேலும், ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க உரிமம் வழங்கப்பட்ட பிறகு, அவற்றின் செயல்பாட்டை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதன் அடிப்படையில், “ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும்” என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவு சட்டபூர்வமான அடிப்படை இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

அதேநேரத்தில், கடந்த ஜனவரியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே நடைபெற்ற ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, போரூர் சுங்கச்சாவடி, சூரப்பேடு மற்றும் மாதவரம் ரவுண்டானா அருகிலுள்ள இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement