Advertisement

ஆற்காடு அருகே ஓடும் பஸ்சில் பயங்கரத் தீ: 56 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே 56 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பஸ்சில் இருந்த பெண்கள் உள்ளிட்ட 56 பயணிகள் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆற்காட்டில் இருந்து எசையனூருக்கு தடம் எண் 37 கொண்ட ‘மகளிர் விடியல் பயணம்’ அரசு டவுன் பஸ் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. பஸ் சக்கரமல்லூர் அண்ணா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென எஞ்சின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை உடனடியாகக் கவனித்த டிரைவர், சுதாரித்துக் கொண்டு பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.

ஆபத்தை உணர்ந்த டிரைவர், பஸ்சில் இருந்த 56 பயணிகளையும் உடனடியாகக் கீழே இறங்குமாறு சத்தமிட்டு அறிவுறுத்தினார். பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் கீழே இறங்கிய அடுத்த சில நொடிகளில், எஞ்சின் பகுதி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் தீ பஸ் முழுவதும் பரவத் தொடங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

Advertisement

இந்த விபத்து குறித்துப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர வைக்கும் தகவல் வெளியானது. தீ விபத்துக்குள்ளான இந்த அரசு பஸ்சின் ஆயுட்காலம் (Fitness Certificate) இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைய இருந்ததாகத் தெரிகிறது. முதிர்வடைந்த நிலையில் இருந்த பஸ்சை தொடர்ந்து இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பஸ்சில் தீப்பிடித்த போது டிரைவர் காட்டிய சமயோசித புத்தியால் 56 உயிர்கள் காப்பாற்றப்பட்டது குறித்துப் பொதுமக்கள் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், காலாவதியாகும் நிலையில் உள்ள பஸ்களைத் தரம் உயர்த்துவது குறித்துப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement