வண்டலூரில் பள்ளி மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக டாஸ்மாக்? நடவடிக்கை கோரி மக்கள் கோரிக்கை

0
4

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அரசு பள்ளிகளுக்கு அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகின்றன. இந்த இரு பள்ளிகளிலும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிகளுக்கு அருகில் ரயில் பாதை ஓரத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கடையை அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி வளாகத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்குள் இந்த மதுபான கடை அமைந்துள்ளது. மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவியரும், குழந்தைகளை அழைத்து செல்லும் பெண்களும் போதையில் இருக்கும் நபர்களால் அவதிக்குள்ளாகின்றனர் என தெரிவித்தனர்.

மேலும், மதுபானம் அருந்த வரும் சிலர் போதையில் தகராறு செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பள்ளிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றும் அரசின் கொள்கையின்படி, இந்த கடையையும் மாற்ற அல்லது அகற்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.