இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்து!

0
1

இந்தியாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இந்த ஆண்டு இறுதிக்குள் முறைப்படி கையெழுத்திடப்படும் என்று ஐரோப்பிய யூனியன் (EU) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இருதரப்பிலும் கடந்த சில ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளில் சுங்க வரிக் குறைப்பு, அறிவுசார் சொத்துரிமை, மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இரு நாட்டுப் பிரதிநிதிகளும் விரிவாக விவாதித்து வந்தனர்.

இந்தச் சூழலில், இருதரப்புக்கும் இடையே நிலவி வந்த வணிக ரீதியான முக்கியக் கொள்கை முடிவுகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த உன்னத வர்த்தக ஒப்பந்தம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்பட்டு முறைப்படி கையெழுத்தாகும் என்று ஐரோப்பிய யூனியனின் உயர்மட்ட அதிகாரிகள் தங்களது அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இந்தியாவின் ஏற்றுமதித் துறை பெரும் வளர்ச்சி காண்பதோடு, ஜவுளி, தோல் பொருட்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்குக் குறைந்த சுங்க வரியில் தங்குதடையின்றிச் சென்றடையும். மேலும், ஐரோப்பிய நாடுகளின் நவீன தொழில்நுட்பங்களும், முதலீடுகளும் இந்தியாவில் பெருகுவதற்கு இது வழிவகுக்கும் என்பதால், இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.