Advertisement

35 நாட்களில் 207 குற்றங்கள்; நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

தவெக அரசு பொறுப்பேற்று 35 நாட்களில் 207 குற்றங்கள் நடந்துள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் பொதுமக்களிடம் பேசாமல் மௌனம் காப்பது ஏன் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் இல்லத்தில் இன்று முக்கிய அரசியல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருந்த பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் தயா சங்கர் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் ஆகியோர், இன்று மீண்டும் திமுகவிலிருந்து விலகி நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.

Advertisement

அப்போது அவர், தவெக அரசு பொறுப்பேற்று 35 நாட்கள் ஆகும் நிலையில், இந்த குறுகிய காலத்தில் மட்டும் தமிழகத்தில் 207 குற்றங்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் நேற்று முன்தினம் 3 வயதுப் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முள்வேலியில் வீசப்பட்ட சம்பவம் எனத் தொடரும் கொடூரங்களால் குற்றங்கள் அசுர வேகத்தில் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் மட்டும் 7 சம்பவங்களும், கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 40 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் நடந்துள்ளதாகப் புள்ளிவிவரங்களை அடுக்கினார். முதலமைச்சர் காலை 10 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 5 மணிக்குச் செல்கிறாரே தவிர, மக்களிடம் பேசுவதில்லை என்றும், சினிமா பிரபலங்களைச் சந்திப்பதிலும் அவர்களுடன் புகைப்படம் எடுப்பதிலுமே ஆர்வமாக இருக்கிறார் என்றும் சாடினார். தேர்தலுக்கு முன் “ப்ரோ”, “அங்கிள்” எனப் பேசியவர், இப்போது இத்தனை குற்றங்கள் நடக்கும்போது மௌனம் காப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அடுத்த 6 மாதங்களில் அம்பாசமுத்திரம், விராலிமலை, மதுராந்தகம், ஈரோடு, பெருந்துறை, தாராபுரம் போன்ற இடங்களில் இடைத்தேர்தல் வரவுள்ள சூழலில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம் நடத்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தவெக அரசு இழுத்து வருவதாகவும், இது தொடர்பாகச் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு 10 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் கூறி வெள்ளை அறிக்கை விடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று விமர்சித்த அவர், தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளதே பாலியல் குற்றங்களுக்குக் காரணம் என்றார். சென்னை விமான நிலையத்தில் 5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டதைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் காவல்துறையைச் சரியாகச் செயல்படுத்தவில்லை என்றும், காவல்துறைக்குச் சுதந்திரம் இல்லை என்றும் குற்றஞ்சாட்டினார். போதைப்பொருளைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசைக் கண்டித்துச் சென்னையில் பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Advertisement

பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவெக அரசால் உருவாக்கப்பட்ட “சிங்கப் பெண்” காவலர் படை பெயரளவில் மட்டுமே இருக்கிறது என்று சாடிய அவர், சிவகங்கையில் பெண் காவலர்களே (சிங்கப் பெண் படையினர்) பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார். டெல்லி பயணத்தின் போது அமித் ஷா, ஜே.பி. நட்டா மற்றும் சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்துக் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்தே பேசப்பட்டதாகவும், கடந்த காலத் தோல்விகள் அல்லது பழைய கூட்டணிகள் குறித்து விவாதிக்கவில்லை என்றும் தெரிவித்த அவர், அதிமுகவுடனான கூட்டணி குறித்துத் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார். நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்றும், அவருக்குப் பிரதமர் மோடியின் 4 ஆண்டு காலத் திட்டங்கள் குறித்த புத்தகத்தை வழங்கியதில் எந்த அரசியலும் இல்லை என்றும் கூறினார். இறுதியாக, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த போதும், தற்போதும் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று கூறி நயினார் நாகேந்திரன் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement