வண்டலூர் மேம்பாலத்தில் மீண்டும் பயங்கர சத்தம்; உறுதித்தன்மை குறித்து வாகன ஓட்டிகள் அச்சம்

0
4

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள முக்கிய மேம்பாலத்தில் மீண்டும் காதைப் பிளக்கும் அளவிற்கு சத்தம் எழுவதால், அதன் உறுதித்தன்மை குறித்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். பலமுறை பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பிரச்சினை தொடர்வதால், நிபுணர்கள் மூலம் விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வண்டலூர் ரயில் நிலையம் அருகே, ஜி.எஸ்.டி. சாலை மற்றும் வாலாஜாபாத் சாலையை இணைக்கும் வகையில் 2011-ஆம் ஆண்டு ரூ.27 கோடி செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. சுமார் 1,500 மீட்டர் நீளமுடைய இந்தப் பாலம் 2012-ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

மேம்பாலத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ‘எக்ஸ்பன்ஷன் ஜாயின்ட்’ எனப்படும் இரும்பு இணைப்பு தகடுகளிலிருந்தே சத்தம் எழுவதாக கூறப்படுகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டு பாலத்தில் கடும் சத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து 33 இடங்களில் சேதமடைந்திருந்த இரும்பு தகடுகளை சீரமைத்தனர். பின்னர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் மீண்டும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கனரக வாகனங்கள் செல்லும் போது பாலம் முழுவதும் அதிர்வுடன் சத்தம் எழுவதாகவும், இரவு நேரங்களில் இது மேலும் அதிகமாக உணரப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பாலத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால், அறிவியல் மற்றும் கட்டுமான நிபுணர்களை கொண்டு முழுமையான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வண்டலூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.