கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றத் தமிழ்நாடு சட்டசபைப் பொதுத்தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐ.எஸ்.இன்பதுரையின் வெற்றி செல்லாது என்றும், அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரியும் வழங்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2016 சட்டசபைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இ.எஸ்.இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், தபால் வாக்குகள் மற்றும் சில சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் நடத்தும் அலுவலர் முறைகேடு செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, திமுக வேட்பாளரான எம்.அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நீண்டகாலச் சட்டப் போராட்ட விசாரணையின் முடிவில், சென்னை உயர் நீதிமன்றம் தபால் வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை செய்து தீர்ப்பளித்தது.சென்னை உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற முதன்மை அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து இடைக்காலத் தடை விதித்ததுடன், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தலையீடு மற்றும் தடை உத்தரவு, தமிழக அரசியல் களம் மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பையும், புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












