தமிழ் மற்றும் ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து, சமீப காலமாகத் திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டது குறித்து பிரபல நடிகை டாப்சி பன்னு (Taapsee Pannu) மிகத் திறந்த மனதுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்தியச் சினிமாவில் தமிழ், தெலுங்குத் திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகி, பின்னர் பாலிவுட்டில் கவனீர்க்கத்தக்க அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை டாப்சி. கடந்த சில வருடங்களாகத் திரைப்படத் தேர்வுகளில் பெரிய இடைவெளி விட்டு வரும் அவர், சினிமாத் துறையின் போட்டி நிறைந்த இந்த ஓட்டப் பந்தயம் குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து உருக்கமாகப் பேசியுள்ள நடிகை டாப்சி, “திரையுலகில் வெறும் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருந்ததால், எனது அழகான வாழ்க்கைப் பயணத்தை நிம்மதியாக ரசிக்கத் தவறிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். பிறரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது நான்தான் இத்துறையின் மிகச் சிறந்த நடிகை என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பதற்காகவோ இந்த அவசர ஓட்டத்தில் ஓட நான் விரும்பவில்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது வாழ்க்கை மற்றும் மன நிம்மதி குறித்துப் பேசிய அவர், “வாழ்க்கையில் நமது லட்சியம் என்பது நம்மை ஒரு சிறந்த மனிதராக வளர்க்க உதவ வேண்டுமே தவிர, அதுவே நமது மன அமைதியைப் பறிப்பதாக மாறிவிடக் கூடாது” என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
திரையுலகில் வெற்றி, தோல்வி மற்றும் மக்களின் பாராட்டுக்களுக்குப் பின்னால் கண்மூடித்தனமாக ஓடாமல், சொந்த மன அமைதிக்கும் ஆத்ம திருப்திக்கும் முக்கியத்துவம் அளித்து நடிகை டாப்சி பேசியுள்ள இந்தத் தத்துவார்த்தமான பேச்சு, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.













