பீகார் மாநிலம் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பல்வேறு முன்னணி அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வியூக அமைப்பாளராகப் பணியாற்றி, கடந்த 2024-இல் ஜன் சுராஜ் கட்சியைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோர், முதன்முறையாகத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட்டு இப் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
பாஜக கோட்டை தகர்ப்பு: பங்கிபூர் தொகுதியில் கடந்த 2010 முதல் 2025 வரை பாஜகவின் நிதின் நவீன் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார். அவர் சமீபத்தில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் கோட்டையாக விளங்கிய இத் தொகுதியில் களமிறங்கிய பிரசாந்த் கிஷோர், 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா 44,827 வாக்குகள் பெற்றார்.
வெற்றிக்குப் பின் பிரசாந்த் கிஷோர் பேட்டி: “அடுத்த 3 மாதங்களில் பங்கிபூர் தொகுதியில் நிகழும் மாற்றங்களை நீங்கள் நேரில் காணலாம். பங்கிபூர் மற்றும் ஒட்டுமொத்த பீகார் மக்களும் என்னை எப்போதும் தொடர்புகொள்ளலாம். நான் அசாதாரணமான சாதனை எதையும் செய்யவில்லை என்றாலும், 30 நாட்களில் பாஜகவின் 30 ஆண்டுகால ஆதிக்கத்தைத் தகர்த்துள்ளேன். குற்றப்பின்னணி கொண்டவர்கள் பீகாரை வழிநடத்த மக்கள் விரும்பவில்லை என்பதை இத் தேர்தல் முடிவு காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
இளைஞர்களின் ஆதரவும் வாழ்த்துகளும்: டெல்லி மாணவர் போராட்டத்தின் தாக்கமும், ‘ஜென்ஸீ’ இளம் தலைமுறை வாக்காளர்களின் பெருவாரியான ஆதரவும் பிரசாந்த் கிஷோரின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இப் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, பீகார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, பிரசாந்த் கிஷோருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.













