Advertisement

“பொதுமக்களின் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது” – செல்போன் பேசும் காவலர்கள் மீது சென்னை ஐகோர்ட் அதிருப்தி!

சென்னை மாநகரின் உச்சகட்டப் போக்குவரத்து நெரிசல் நிலவும் நேரங்களில், சாலையில் நின்று போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டிய போக்குவரத்துக் காவல் துறையினர், தங்களது கடமையை மறந்து செல்போன்களில் பேசுவதிலும் செயலிகளைப் பயன்படுத்துவதிலுமே தீவிரமாக இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை நகரின் முக்கியச் சிக்னல் ஒன்றில் பெண் ஒருவர் மீது கார் மோதி ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் நீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்தச் சம்பவத்தை நேரடியாகப் பார்த்துள்ளார். சிக்னலில் நின்றிருந்த போக்குவரத்துக் காவலர் தன்னுடய பணியைக் கவனிக்காமல், செல்போனில் மூழ்கியிருந்ததால் தான் அந்த விபத்து நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் இருக்கும் காவலர்கள் மொபைல் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தமிழ்நாடு டிஜிபிக்கும் சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில், எல்.ஜி.பி.டி.க்யூ.ப்ளஸ் (LGBTQ+) சமூகத்தினரின் உரிமைகள் தொடர்பான வழக்கு இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரத்தைக் குறிப்பிட்ட நீதிபதி, “கடந்த 2019-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து பல சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போதும் போக்குவரத்துக் காவலர்கள் தீவிரப் போக்குவரத்து நெரிசல் நிலவும் உச்ச நேரங்களில் கூடச் சாலைகளில் நின்று கொண்டு செல்போனில் பேசுவதிலேயே மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்” என வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

Advertisement

தொடர்ந்து பேசிய நீதிபதி, “இந்த விஷயத்தில் காவல் துறையினர் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினையைக் காவல் துறை நிர்வாகம் மிகத் தீவிரமான விஷயமாகக் கருத வேண்டும்” எனத் தெரிவித்து, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு ஆணித்தரமாக அறிவுறுத்தினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அதிருப்தி காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement