Advertisement

“கர்நாடகா – தமிழ்நாடு இந்தியா, பாகிஸ்தான் கிடையாது” – கர்நாடகப் பயணத்திற்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்!

காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதல்வர் தனது மாநில நலனுக்காகப் பேசுவது இயல்பானது என்றும், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வர வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் மிகத் தீர்க்கமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் மாநிலக் காங்கிரஸ் தலைவருமான மாணிக்கம் தாகூர், காவிரி நதிநீர்ப் பிரச்சனை மற்றும் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) திட்டங்கள் குறித்துத் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகளை விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

“தமிழகத்திற்குத் தண்ணீர் வருவதுதான் முக்கியம்!” கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் கருத்துக்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “கர்நாடக முதல்வர் அம்மாநிலத்துக்காகத் தான் பேசுவார். அவருக்குத் தமிழ்நாட்டின் நலன் முக்கியமல்ல; ஆனால் எனக்குத் தமிழ்நாட்டின் நலனும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமும் தான் முதன்மையானது. தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான உறவு ஒன்றும் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை கிடையாது. இரு மாநில முதல்வர்களும் நேரடியாகச் சந்தித்துப் பேசிச் சுமூகத் தீர்வு காண நினைப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் எந்தத் தவறும் இல்லை. எ எப்படியாவது நமது விவசாயிகளுக்கு உரியக் காவிரித் தண்ணீர் வந்து சேர வேண்டும் என்பதே நமது இலக்கு” என்று குறிப்பிட்டார்.மேலும், கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் காவிரி விவகாரத்தில் மாநில நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்படுவதைச் சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர், துரதிர்ஷ்டவசமாகத் தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளுக்குக் காவிரி உரிமையை விட அரசியல் காய்நகர்த்தல்களே முக்கியமாக இருக்கிறது என்று சாடினார்.

Advertisement

“தொகுதி மறுவரையறையை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்” மத்திய அரசு முன்னெடுக்க நினைக்கும் தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேசிய அவர், “மத்திய அரசின் தொகுதி மறுவரையறை முயற்சி தென் மாநிலங்களின், குறிப்பாய் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் குரலையும் முற்றிலுமாக முடக்கும் செயலாகும். திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் ஒருவேளை விலகினாலும் கூட, மாநில உரிமையைப் பாதிக்கும் இந்தத் தொகுதி மறுவரையறைப் பிரச்சனையில் காங்கிரஸ் தனது உறுதியான எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து எள்ளளவும் மாறாது.

தமிழ்நாட்டின் நலன் கருதி அனைத்து அரசியல் இயக்கங்களும் கட்சி வேறுபாடின்றி இத்திட்டத்தை ஒரே குரலில் எதிர்த்து முறியடிக்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.காவிரி நீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுவார்த்தை முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த அதேவேளையில், தொகுதி மறுவரையறையில் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ள மாணிக்கம் தாகூரின் இந்த அதிரடி அறிக்கை, மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் சுவாரஸ்யத்தையும் புதிய விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement