உலக நன்மை மற்றும் அமைதிக்காக ஊரப்பாக்கம் கனகதுர்க்கை அம்மன் கோவிலில் 9 நாட்கள் சிறப்பு யாகங்கள், ஹோமங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
🙏 செப்.1 முதல் அதிருத்ர மகா யக்ஞம்
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம், பிரியா நகர் விரிவு பகுதியில் அமைந்துள்ள கனகதுர்க்கை அம்மன் கோவிலில், உலக நன்மை மற்றும் அமைதிக்காக அதிருத்ர மகா யக்ஞம் மற்றும் சண்டி ஹோமம் வரும் செப்டம்பர் 1 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 1-ம் தேதி காலை கணபதி ஹோமம் மற்றும் கலச ஸ்தாபனம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ஸ்ரீருத்ர ஜெபம் மற்றும் ஸ்ரீ ருத்ர ஹோமம் நடைபெற உள்ளன.
🔥 சண்டி ஹோமம், சிறப்பு பூஜைகள்
ஒன்பது நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில், செப்டம்பர் 7-ம் தேதி சண்டி ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் பூதசுத்தி விவாஹம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 9-ம் தேதி விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. யக்ஞம் மற்றும் ஹோமங்களில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒன்பது நாட்களிலும் பக்தர்களுக்கு தினமும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🎭 தினமும் ஆன்மிக நிகழ்ச்சிகள்
இந்த ஒன்பது நாட்களிலும் தினமும் மாலை 6 மணியளவில் இயல், இசை, நாடகம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம், சிவபுராணம், கபாலி அறுபத்து மூவர் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக தலைப்புகளில் சொற்பொழிவுகள் இடம்பெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. யக்ஞம், ஹோமம் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்று பயன்பெறுமாறு கோவில் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












