“சட்டம் ஒழுங்கு இருக்கா? தவிக்கும் தமிழ்நாடு!” – தவெக அரசை விமர்சித்த கனிமொழி!

0
5

தமிழ்நாட்டில் நாள்தோறும் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளன என்றும், சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்கிற கேள்விக்குறியான சூழ்நிலையில் இன்று தமிழகம் மாட்டிக் கொண்டுள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்றும் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்பி, புதிய தவெக அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத் தோல்விகளை விமரிசித்துப் பேசினார். அவர் கூறுகையில், “ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன. குழந்தைகள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் தாக்கப்படும் சூழலை நாம் சந்தித்துக் கொண்டுள்ளோம்” என்று வேதனை தெரிவித்தார்.

மேலும் புதிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், “புதிதாகப் பதவியேற்றுள்ள அரசுக்கு போதிய அவகாசம் தரப்பட்டுள்ளது. இதற்குப் பிறகும் கூட சூழ்நிலையை அவர்கள் சரி செய்யவில்லை என்றால், நிச்சயமாக மக்களின் அவநம்பிக்கைக்குத் தான் அவர்கள் ஆளாக வேண்டி இருக்கும்” என்று கூறினார். 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், கனிமொழி விடுத்துள்ள இந்த சட்டம் ஒழுங்கு விமரிசனம் தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.