செங்கல்பட்டு விவசாயிகளுக்கு அரசு மானியம்; நெல் சாகுபடிக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை!

0
2

செங்கல்பட்டு மாவட்டத்தில் சொர்ணவாரி பட்டத்தில் நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு மானிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பிரேம்சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கர் பரப்பில் இயந்திர நடவு அல்லது நேரடி விதைப்பு முறையில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.4,000 நடவு மானியம் வழங்கப்படும். ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை இந்த நன்மையை பெற முடியும்.

மேலும், நெல் விதைகள், நுண்ணூட்ட உரக்கலவைகள் மற்றும் திரவ உயிர் உரங்கள் ஆகியவை 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளன. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 5 ஏக்கர் வரை இந்த சலுகை கிடைக்கும். இதன்மூலம் மாவட்டத்தில் சுமார் 4,250 விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மானியம் பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் எண், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு விவரம் மற்றும் ரேஷன் அட்டை எண்ணுடன் உழவர் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும். விவசாயி தனித்துவ அடையாள எண் பெற்றவர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.