Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் 586 புதிய குளங்கள்: ரூ.74.28 கோடி ஒதுக்கீடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வளர்ச்சியடைந்த பாரதம்–கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் 586 புதிய குளங்கள் அமைக்க ரூ.74.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

💧 புதிய குளங்கள் அமைக்கும் திட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 359 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் சாலைகள், சிறுபாலங்கள், வீடுகள், குளங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு திட்டத்தின் பெயரை மாற்றி, வளர்ச்சியடைந்த பாரதம்–கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் (வி.பி.-ஜி. ராம்.ஜி) என அறிவித்துள்ளது. இதன்படி, வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டதுடன், தினசரி ஊதியம் ரூ.336-ல் இருந்து ரூ.345 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

🏗️ 7 ஒன்றியங்களில் பணிகள்

2026–27ம் நிதியாண்டில் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 169, மதுராந்தகத்தில் 123, சித்தாமூரில் 92, இலத்தூரில் 29, திருக்கழுக்குன்றத்தில் 36, திருப்போரூரில் 92, காட்டாங்கொளத்தூரில் 45 என மொத்தம் 586 புதிய குளங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.74.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 21,45,464 பேர் புதிய குளங்கள் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பணியாளர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என வழங்குகிறது.

📋 கிராம சபை ஒப்புதல் அவசியம்

ஒவ்வொரு ஊராட்சியிலும் குளம் அமைக்கும் பணிக்கு முன், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். அதன்பின் பணிக்கான வேலை உத்தரவு ஊராட்சி செயலருக்கு வழங்கப்பட்டு, கிராம சபை ஒப்புதலுடன் பணிகள் செயல்படுத்தப்பட வேண்டும். ஒரு நாளில் 4 மணி நேர பணியின் அளவு மட்டுமே கணக்கிடப்பட்டு, அதற்கான முழுமையான ஊதியம் வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய குளங்கள் அமைப்பதன் மூலம் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதுடன், கிராமப்புற மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement