Advertisement

விபத்தில் பலியான வாலிபர் உடலில் புழுக்கள்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உறவினர்கள் வாக்குவாதம்!

செங்கல்பட்டு மேம்பால விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமாரின் உடலிலிருந்து புழுக்கள் வெளியேறியதாகக் கூறி, அரசு மருத்துவமனை மருத்துவர்களுடன் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலிலிருந்து புழுக்கள் வெளியேறியதாகக் கூறி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களுடன் உறவினர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் அருகே உள்ள ஒரு தனியார் இருசக்கர வாகன விற்பனையகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், செங்கல்பட்டு மேம்பாலத்தில் கட்சி நிகழ்வுக்காகக் கொடிகள் கட்டுவதற்காக டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாகத் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த சதீஷ்குமார், எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த வாகனத்தின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்தில் சிக்கினார்.

தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சதீஷ்குமார், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்குள்ள நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகப் பிணவறைக்கு எடுத்துச் சென்றபோது, அவரது உடலிலிருந்து புழுக்கள் வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொதித்தெழுந்தனர். “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை முறையாகக் கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” எனக் கூறி அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விபத்து மற்றும் சிகிச்சை அலட்சியம் தொடர்பாக முழுமையான பிரேதப் பரிசோதனை ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement