Advertisement

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் புறக்காவல் நிலையம் செயல்படுமா?

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் ஐந்து ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, இரவு நேர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🚔 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம்

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள செங்கல்பட்டு–காஞ்சிபுரம் சாலை மேம்பாலத்தின் இருபுறமும் அணுகுசாலைகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நின்று செல்கின்றன. மேலும், தென்மாவட்டங்களில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு செல்லும் பக்தர்களும் இந்த வழியாக பயணிக்கின்றனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

Advertisement

⚠️ ஐந்து ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் நிலையம்

புறக்காவல் நிலையம் செயல்பட்ட காலத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பேருந்து பயணிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வு இருந்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் இருப்பதால், புறக்காவல் நிலையம் பூட்டியே கிடக்கிறது. இரவு நேரங்களில் போலீசார் கண்காணிப்பு இல்லாததை பயன்படுத்தி சமூக விரோதிகள் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும், ரவுடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

👮‍♀️ பயணிகள், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்

இரவு நேரங்களில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பணிக்கு சென்று வீடு திரும்பும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆள்நடமாட்டம் குறைந்த நேரங்களில் போலீஸ் கண்காணிப்பு இல்லாதது சமூக விரோத செயல்களுக்கு வாய்ப்பாக அமைகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை உடனடியாக மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அங்கு 24 மணி நேரமும் போலீசார் பணியில் ஈடுபடுவதற்கான நடவடிக்கையை செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement