செங்கல்பட்டில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய திமுக நகரச் செயலாளர் நரேந்திரன், கவுன்சிலர் சந்தோஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய விவகாரத்தில், செங்கல்பட்டு திமுக நகரச் செயலாளர், திமுக கவுன்சிலர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் மலையாளத் தெருவைச் சேர்ந்தவர் ரேகா (45). இவர் தனது குடும்பத்தினருடன் பேத்தியின் காதுகுத்து விழாவிற்குப் புத்தாடைகள் எடுப்பதற்காக காரில் செங்கல்பட்டு நகருக்கு வந்துள்ளார். செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பழச்சாறு கடை முன்பு காரை நிறுத்திவிட்டுச் சென்றபோது, அருகிலிருந்த உணவகத்தின் ஊழியர் அங்கு காரை நிறுத்தக் கூடாது எனத் தடுத்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென முற்றிக் கடுமையான கைகலப்பாக மாறியது.
அப்போது உணவகத்தின் உரிமையாளரான செங்கல்பட்டு திமுக நகரச் செயலாளரும், நகர மன்றத் தலைவரின் கணவருமான நரேந்திரன் (59), 30-வது வார்டு திமுக கவுன்சிலர் சந்தோஷ் (45) மற்றும் ஊழியர்களான ராமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் (40), மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த சூர்யா (32) ஆகியோர் இணைந்து ரேகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ரேகா உள்ளிட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த செங்கல்பட்டு நகரக் காவல் நிலையப் போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாகப் பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நரேந்திரன், கவுன்சிலர் சந்தோஷ், மோகன், சூர்யா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரையும் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












