சுடுகாட்டு சாலை பணியில் ₹2.24 லட்சம் முறைகேடு? கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்

0
4

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சந்தாங்கல் கிராமத்தில், சுடுகாட்டிற்கு சாலை அமைக்கும் பணியில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் வீரப்பனிடம் மனு அளித்துள்ளனர்.

மனுவில் கூறப்பட்டதாவது: ஈசூர் ஊராட்சிக்குட்பட்ட பிச்சந்தாங்கல் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பொதுமக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், 2023–24 நிதியாண்டில் சுடுகாட்டிற்கு பேவர் பிளாக் சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், நடைமுறையில் எந்த சாலை பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், பணிகள் நிறைவேற்றப்பட்டதாக போலியான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு ₹2.24 லட்சம் தொகை ஒப்பந்ததாரரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக ஊராட்சி தலைவர், ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊராட்சி நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து, சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.