வெடால் நெல் கொள்முதல் நிலையத்தில் அலட்சியம்? ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம்

0
2

செய்யூர் அருகே உள்ள வெடால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 2,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் குறுவை நெல் மற்றும் வேர்க்கடலை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய செய்யூர் மற்றும் மதுராந்தகம் தாலுகாக்களில் 20 தற்காலிக கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

வெடால் பகுதியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து சுமார் 10,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள 2,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைவதுடன், சில மூட்டைகள் கிழிந்து நெல் வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகவும், இதுகுறித்து புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்றி சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.