செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயராம்பேடு விஷ்ணுப்ரியா நகர் காப்புக் காட்டில் சந்தேகப்படும்படியான வகையில் மூன்று இளைஞர்கள் சுற்றித்திரிவதாகக் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காப்புக்காட்டில் தீவிரமாகத் தேடியதில், அங்கிருந்த மூன்று இளைஞர்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பிக்க முயற்சித்தனர். உடனே போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்.
அதைத் தொடர்ந்து அவர்களைக் கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், குறிப்பாகப் பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதற்காகத் திட்டமிட்டு அங்கு வந்ததாகவும் தெரிவித்தனர். அதனையடுத்து அவர்கள் காயராம்பேடு காப்புக் காட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த இளைஞர்கள் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த முருகன் (28), நந்திவரம் கூடுவாஞ்சேரி ராணி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற குணசேகரன் (19) மற்றும் சென்னை அண்ணாநகர் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.













