PM-YASASVI திட்டத்தின் கீழ் தகுதியான 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
🎓 ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC), சீர்மரபினர் (DNT) மாணவ, மாணவியர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டமான PM-YASASVI – Top Class Education in Schools செயல்படுத்தப்படுகிறது. 2026-27ஆம் கல்வியாண்டில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கொண்ட, 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.75,000 வரையும், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரையும் கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக உதவித்தொகை வழங்கப்படும்.
👨👩👧 வருமான வரம்பு மற்றும் தகுதிகள்
மாணவர் OBC, EBC அல்லது DNT பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், 2025-26ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்றதாகவும், மத்திய அரசு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகுதியான பள்ளிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளியில் பயில்பவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் மாணவியர்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
📅 புதுப்பித்தல் விண்ணப்பத்திற்கு ஆக.31 கடைசி நாள்
2025-26ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள், 2026-27ஆம் ஆண்டிற்கான Renewal விண்ணப்பத்தை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து, 31.08.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை சரிபார்க்கும் கடைசி நாள் 15.09.2026 ஆகும். 2026-27ஆம் ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Fresh விண்ணப்ப தேதி NSP இணையதளத்தில் அறிவிக்கப்படும். தகுதியான மாணவர்கள் National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக இணையதளம் (https://socialjustice.gov.in) மூலம் கூடுதல் விவரங்களை அறிந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்








