Advertisement

‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: கலெக்டர் நேரில் ஆய்வு!

திடக்கழிவு மேலாண்மை, பள்ளிகள், விவசாயம், அரசு நலத்திட்டங்கள் குறித்து சித்தாமூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் எம். வீரப்பன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

♻️ திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். வீரப்பன் நேரில் ஆய்வு செய்தார். குப்பைக் கிடங்குகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரித்து, நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதே வளாகத்தில் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதையும் பார்வையிட்டார்.

Advertisement

மேலும், திடக்கழிவு மேலாண்மை மூலம் பிரிக்கப்படும் பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி, மரம், டயர், அட்டைப்பெட்டி, காகிதம் உள்ளிட்ட பொருட்கள் எவ்வாறு மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் சிமெண்ட் ஆலைகளின் பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதும், கண்ணாடி மறுசுழற்சிக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவதும் குறித்து கேட்டறிந்தார். நாள்தோறும் எவ்வளவு குப்பைகள் கையாளப்படுகின்றன, இதற்கான நிதி இருப்பு, ஏற்கனவே குப்பைகளை கையாண்டதன் மூலம் கிடைத்த வருவாய் உள்ளிட்ட ஆவணங்களையும் அவர் ஆய்வு செய்தார். காய்கறி கழிவுகள் இயந்திரங்கள் மூலம் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு மண்ணுரமாக மாற்றப்படுவதையும் பார்வையிட்டார்.

Advertisement

🏫 பள்ளி, நாற்றங்கால் மற்றும் விவசாயப் பணிகள் ஆய்வு
சோத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டார். பள்ளியில் தயாரிக்கப்பட்ட மதிய உணவின் தரம், அன்றைய மாணவர் வருகை, தயாரிக்கப்பட்ட உணவின் அளவு, அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் அளவீடுகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து கீழ்மருவத்தூரில் வேளாண்மைத் துறையின் சிறிய நாற்றங்கால் உற்பத்தி கூடத்தை பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் மரக்கன்றுகள் மற்றும் அவை யாருக்கு விநியோகிக்கப்படுகின்றன என்பது குறித்து கேட்டறிந்தார். பொறையூர் ஊராட்சி திருவிளச்சேரி கிராமத்தில் விவசாயிகள் இயந்திரங்கள் மூலம் மேற்கொண்டு வரும் குறுவை சாகுபடி பணிகளையும் பார்வையிட்டார். அங்குள்ள பால் கூட்டுறவு சங்கத்தை ஆய்வு செய்ததுடன், ஏரி தூர்வாரும் பணிகளின் முன்னேற்றத்தையும் பார்வையிட்டார். சித்தாமூர் பகுதியில் தரிசாக உள்ள விவசாய நிலங்களை ஊட்டச்சத்து மிக்க நிலங்களாக மாற்றும் நோக்கில், ‘முதலமைச்சரின் மன்னுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் நிலங்களில் தக்கைப்பூண்டு விதைத்து வளர்த்துள்ளதை பார்வையிட்டு, அதன் மூலம் மண்ணின் ஊட்டச்சத்து மேம்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

🏠 நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் மனுக்கள்
இரும்புலியூர் பகுதியில் ஜன்மன் திட்டத்தின் கீழ் நரிக்குறவர்களுக்கு வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பொலம்பாக்கத்தில் பள்ளி மாணவர்களுக்காக செயல்படும் சமூக நீதி விடுதியை பார்வையிட்டார். அரசு வழிகாட்டுதலின்படி வார நாட்களுக்கான உணவுப் பட்டியலின்படி மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ததுடன், அன்றைய உணவு குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அன்று உருளைக்கிழங்கு பொரியல் மற்றும் முட்டை வழங்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

   

மாணவர்களின் கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகளும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். மாலை 4 மணியளவில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் முதல்நிலை அலுவலர்கள் தாங்கள் ஆய்வு செய்த ஊராட்சிகளின் அறிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர். தொடர்ந்து சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement