Advertisement

செங்கல்பட்டில் மாபெரும் தூய்மை பணி!

அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் புதர்கள், குப்பைகள் மற்றும் கொசு உற்பத்தி இடங்களை அகற்றும் சிறப்பு தூய்மை பணி நடைபெறுகிறது.

🧹 ஆக.29-ல் மாபெரும் தூய்மை பணி
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 29.08.2026 சனிக்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கட்டிடங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் மாபெரும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை முழுமையாக சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வளர்ந்துள்ள புதர்கள், களைகள், தேவையற்ற செடிகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

Advertisement

🦟 டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
மழைநீர் தேங்கும் இடங்கள், பள்ளங்கள் மற்றும் தேவையற்ற நீர் தேக்கங்களை கண்டறிந்து உடனடியாக அகற்ற வேண்டும். பழைய டயர்கள், தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். குடிநீர் தொட்டிகள் மற்றும் நீர் சேமிப்பு கலன்களை சுத்தம் செய்து முறையாக மூடி வைக்க வேண்டும். மாடிப்பகுதி, கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் கட்டிடங்களின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காத வகையில் பராமரிக்க வேண்டும். தேவையான இடங்களில் கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

📋 புகைப்படங்கள், அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலக பணியாளர்களிடம் டெங்கு தடுப்பு மற்றும் சுற்றுப்புறத் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேற்கொள்ளப்படும் தூய்மை மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் கட்டிட வளாகங்கள் புதர்கள், குப்பைகள் மற்றும் கொசு உற்பத்தி மூலங்கள் இல்லாத சுகாதாரமான வளாகங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்கொள்ளப்பட்ட பணிகளின் புகைப்படங்கள் மற்றும் செயல்பாட்டு அறிக்கையை உரிய அலுவலர் மூலம் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞ்சல் வாயிலாக சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் எம். வீரப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement