சென்னை தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்காக அடுத்து செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்துத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் புதிய தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மக்கள் பயன்பாட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று போக்குவரத்துத் துறை மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதல்வர் சி. ஜோசப் விஜய், மாநிலம் முழுவதும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் தற்போதைய நிலை, புதிய பேருந்துகள் வாங்குவது மற்றும் மக்களின் பயணப் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், போக்குவரத்துத் துறைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் பேருந்து சேவைகளைத் தொடங்குவது, கிராமப்புற மற்றும் மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பது, மற்றும் பேருந்து நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், போக்குவரத்துத் துறையின் நிதி நிலைமையைச் சீரமைப்பதுடன், ஊழியர்களின் நலன்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.













