செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இரு தனித்தனி சாலை விபத்துகளில் பள்ளி மாணவி மற்றும் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் அரசு பள்ளி மாணவி காவியா (11), பள்ளி முடிந்து தனது தாத்தா தன்சிங்குடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது முடிச்சூர் சாலையில் அரசு பேருந்து மோதியதில் காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் தாத்தா தன்சிங் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்திற்குப் பிறகு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் போலீசில் சரணடைந்தனர். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவமாக, வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் வண்டலூர் ஏரிக்கரை அருகே நேற்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் படப்பையைச் சேர்ந்த கௌசிகா ராஜன் (21) தலையில் பலத்த காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்றொரு பைக் ஓட்டுநரான சரவணன் (51) காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கௌசிகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வண்டலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













