பவுஞ்சூர் பஜாரில் குடிநீர் நிலையம் அமைக்க பயணிகள் கோரிக்கை

0
4

செய்யூர் அருகே உள்ள பவுஞ்சூர் பஜார் பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால், தினசரி பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, அப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் முக்கிய நிர்வாக மையமாக விளங்கும் பவுஞ்சூர் பஜார் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வேளாண் விரிவாக்க மையம், வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன.

பச்சம்பாக்கம், திருவாதூர், பவுஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியூர் பயணங்களுக்கு பவுஞ்சூர் பேருந்து நிறுத்தத்தை முக்கியமாக பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஏராளமான மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பேருந்து நிறுத்தம் மற்றும் பஜார் பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால், குறிப்பாக கோடை காலங்களில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அருகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காததால், பலர் தனியார் கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பவுஞ்சூர் பஜார் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து, நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.