பெருங்களத்தூர் ரயில் நிலைய சாலையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

0
1

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்குச் செல்லும் சீனிவாச ராகவன் பிரதான சாலையில் மேம்பாலத்தின் கீழ் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெருங்களத்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வரும் நிலையில், ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் இருசக்கர வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதி முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் சாலை அகலம் குறைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, பொதுமக்கள் மற்றும் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசரகால சேவை வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் தாமதம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனியாக வாகன நிறுத்துமிடம் அமைத்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், அவசரகால வாகனங்கள் தடையின்றி செல்லவும் சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.