சென்னை அணுமின் நிலையத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ், மாமல்லபுரம் அடுத்த பையனூரில் ரூ.2.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடம் மற்றும் நவீன கழிப்பறைகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.
சென்னை அணுமின் நிலையம் கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவ முகாம்கள், மீனவர் நலத்திட்டங்கள், விவசாய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பையனூர் ஊராட்சியில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் சுமிதா முத்துக்குமார் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று, சென்னை அணுமின் நிலையம் தனது CSR திட்டத்தின் கீழ், பையனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 6 வகுப்பறைகள் மற்றும் நவீன கழிப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடத்தை அமைத்துக் கொடுத்தது.
புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் சுமிதா முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கமலக்கண்ணன், ஊராட்சி துணைத்தலைவர் குமார், ஒன்றிய கவுன்சிலர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சென்னை அணுமின் நிலைய இயக்குநர் சேஷய்யா கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புதிய பள்ளி கட்டிடம் மற்றும் நவீன கழிப்பறைகளை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும், பெருநிறுவன சமூகப் பொறுப்பு குழுத் தலைவர் ஹரிகிருஷ்ணன், உறுப்பினர் செயலர் ஜெகன், தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கருணாமூர்த்தி உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர்.
இந்த புதிய கட்டிட வசதியால் பையனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மேம்பட்ட கல்விச் சூழலில் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.





