தமிழகத்தில் எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்துச் சென்னை கிண்டியில் அவசர ஆலோசனை நடத்திய கனிம வளத்துறை அமைச்சர் பிரபு, விதிகளை மீறும் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாகக் கல்குவாரிகள் நடத்தினாலோ, அல்லது அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிக அளவு கனிமங்களை வெட்டி எடுத்தாலோ எவ்விதப் பாரபட்சமுமின்றிச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் எனத் தமிழ்நாடு கனிமம் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு அவர்கள் உறைப்பான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அண்மைக் காலமாக எம்.சாண்ட் (M-Sand), பி.சாண்ட் (P-Sand) மற்றும் ஜல்லி உள்ளிட்ட அத்தியாவசியக் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரெனக் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாகப் பொதுமக்கள் மற்றும் கட்டுமான உள்கட்டமைப்புத் துறையினர் சந்தித்து வரும் சிரமங்களைக் களைந்து, விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்துக் கட்டுமானப் பொருட்கள் மற்றும் குவாரி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் பிரபு அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை கிண்டியில் உள்ள புவியியல் மற்றும் சுரங்க ஆணையக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், குவாரி தொழில் கூட்டமைப்பினர், லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கங்களின் முக்கியப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின் போது, சந்தையில் நிலவும் தற்போதைய கட்டண நிலவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, இதற்கு முன்னதாக மொத்த விலையில் ஒரு யூனிட் 5,300 ரூபாய் முதல் 5,500 ரூபாய் வரை விற்பனையான எம்.சாண்ட், தற்பொழுது சந்தையில் 6,500 ரூபாயாக உயர்ந்துள்ளதும், 6,300 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் பி.சாண்ட் தற்பொழுது 7,300 ரூபாயாக அதிகரித்துள்ளதும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதேபோல் 4,300 முதல் 4,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு யூனிட் ஜல்லியின் விலை தற்பொழுது 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளதோடு, நுகர்வோர்களைச் சென்றடைவதற்கான போக்குவரத்துச் செலவும் தாறுமாறாக அதிகரித்திருப்பது குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் சங்கப் பிரதிநிதிகளிடையே உரை நிகழ்த்திய அமைச்சர் பிரபு, “அரசு நிர்ணயித்துள்ள அதிகாரப்பூர்வக் கட்டணத்தை விடக் கூடுதல் விலைக்கு எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட குவாரிகள் மற்றும் கிரஷர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். அதேபோல், குவாரிகளில் இருந்து லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் (Overload) ஏற்றக் கூடாது” என்று கறாராக உத்தரவிட்டார். மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறிக் குவாரிகள் மற்றும் பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை அளவுக்கு அதிகமாகப் பதுக்கி வைக்கக் கடுமையான தடை விதிக்கப்படுவதாகவும், இந்த விதிகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் பிரபு எச்சரித்துள்ளார்.





