Advertisement
, ,

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல்: தோனி, அஜித் படங்களைக் காட்டி இளைஞர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட இந்த நிகழ்வில், நெரிசலில் சிக்கி மூதாட்டி உட்பட மூன்று பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று காலை 5:47 மணி அளவில் கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். இதைக் காண்பதற்காக ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடியக் காத்திருந்தனர். முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அனுமதி அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் குறிப்பிட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

அனுமதி அட்டை வைத்திருந்தவர்களைப் பிரதான வாசல் வழியாக அனுமதிப்பதில் காவல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மூதாட்டியென மூன்று பேர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் மிதித்ததில் காயமடைந்த அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மூதாட்டி மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த நெரிசலிலிருந்து குழந்தைகள் காயமின்றித் தப்பினர்.

குளறுபடிகள் காரணமாக மக்கள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினார். அனுமதி அட்டை வைத்திருப்பவர்களை முறையாகவும், நெரிசலின்றிப் பாதுகாப்பாகவும் அனுமதிக்க வேண்டும் என அவர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

Advertisement

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வேளையில், அங்குத் திரண்டிருந்த இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்களைக் கையில் ஏந்தி உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே, கூட்டத்திற்கு நடுவே ஒரு சிறுவனைச் சில இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கும் நிகழ்வு அரங்கேறியது. உடனடியாகத் தலையிட்ட காவல்துறையினர், லேசான தடியடி நடத்தி அந்தக் கும்பலை விரட்டியடித்துச் சிறுவனை மீட்டனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement