மாணவர்களின் சீருடையே போதும்… பஸ் பாஸ் வேண்டாம்… தமிழக அரசின் அறிவிப்பு!

0
3

புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வசதிக்காக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளி சீருடை அணிந்து வரும் மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புதிய கல்வியாண்டு தொடங்கும்போது மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டைகள் (Bus Pass) வழங்கப்படுகின்றன. எனினும், புதிய பஸ் பாஸ் தயாரிப்பு மற்றும் விநியோகப் பணிகளுக்கு சில நாட்கள் அவகாசம் தேவைப்படுவதால், மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வர இந்த இடைக்கால ஏற்பாட்டை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி சீருடையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்தால், அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து பள்ளி மற்றும் பள்ளியிலிருந்து வீடு வரை இலவசமாக பயணம் செய்யலாம்.

மேலும், அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் தங்களது கல்லூரி அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. புதிய பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு நிதிச் சுமை குறைவதுடன், மாணவர்கள் எந்த தடையும் இன்றி கல்வி நிறுவனங்களுக்கு சென்று வர முடியும். குறிப்பாக கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பயணம் செய்யும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் உதவியாக இருக்கும் என கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் தங்கள் பள்ளி சீருடை அல்லது கல்லூரி அடையாள அட்டையை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும் சிறப்பு பேருந்துகள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் மாணவர்களை அனுமதிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.