பாஜகவிலிருந்து வெளியேறிய அண்ணாமலைக்கு ஆதரவாக செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் பட்டாசு வெடித்து அதிரடி கொண்டாட்டம் ஆதரவாளர்கள்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியதாக வெளியான தகவலை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி பகுதியில் அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மகேந்திரா சிட்டி பகுதியில் திடீரென ஒன்று கூடிய 50-க்கும் மேற்பட்ட அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். பாஜவிலிருந்து அவர் விலகிய முடிவை முழுமனதுடன் வரவேற்பதாகத் தெரிவித்த அவர்கள், அவரது அடுத்தகட்ட அரசியல் பயணத்திற்கும், எதிர்கால உத்திசார் நடவடிக்கைகளுக்கும் தங்களது முழுமையான ஆதரவு எப்போதும் தொடரும் என உணர்ச்சிபொங்கத் தெரிவித்தனர்.
பாஜக தேசியத் தலைமைக்கும் அண்ணாமலைக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்த அரசியல் கருத்து வேறுபாடுகள் டெல்லியில் நேற்று அவரது ராஜினாமாவில் போய் முடிந்தது. இதைத் தொடர்ந்து, அவர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாக அரசியல் மேடைகளில் விவாதங்கள் அசுர வேகத்தில் கிளம்பியுள்ள சூழலில், செங்கல்பட்டில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய இந்த அதிரடிக் கொண்டாட்டம் மற்றும் முழக்கங்கள் அப்பகுதியில் பெரும் விறுவிறுப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





