Advertisement

மேகதாதுவில் கர்நாடகா ஒரு செங்கலை கூட வைக்க முடியாது; மத்திய அரசு உறுதியாக இருப்பதாக நாராயணன் திருப்பதி அதிரடி

வேலூர் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடக அரசு ஒரு செங்கலைக் கூட வைக்க முடியாது என்றும், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் ஒப்புதல் மற்றும் காவேரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்றி அண்டை மாநிலமான கர்நாடகா ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியாது என்பதில் மத்திய அரசு சட்ட ரீதியாக மிக உறுதியாக உள்ளதாகப் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

வேலூர் மாவட்டம் காட்பாடியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து 12 ஆண்டுகள் பதவியில் நிறைவு செய்து, 4,402 நாட்கள் மக்கள் சேவை ஆற்றியுள்ளதை ஒட்டி பாஜக சார்பில் சிறப்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த உள்கட்டமைப்பு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணன் திருப்பதி, “பிரதமர் மோடி அவர்களின் 12 ஆண்டுகால ஆட்சி ஒரு மாபெரும் சாதனையாகும். கூகுள் பே (Google Pay) போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இன்று சாமானிய காய்கறி விற்பனையாளர்கள் வரை கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. ஜன் தன் யோஜனா திட்டம் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு, ₹15 லட்சம் கோடிக்கும் அதிகமான மூலதனச் செலவில் வந்தே பாரத் ரயில்கள், தேசிய நெடுஞ்சாலைகள் என நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரம் சர்வதேசத் தரத்திற்குத் துறைமுக விரிவாக்கத்துடன் வளர்ந்து வருகிறது. கடந்த 2014-இல் ₹1,44,000 ஆக இருந்த நாட்டின் தனிநபர் வருமானம் தற்பொழுது 2026-ஆம் ஆண்டில் ₹2,60,000 ஆக உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்பொழுது 4-வது இடத்திற்கு முன்னேறிச் சாதனை படைத்துள்ளது” என்று மத்திய அரசின் சாதனைகளை அடுக்கினார்.

தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், “கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு தங்களது உட்கட்சிப் பூசல்களை மறைப்பதற்காகவும், இரு மாநிலங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டுவதற்காகவும் உள்நோக்கத்துடன் மேகதாது விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. சட்டத்திற்கு உட்பட்டே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது; தமிழகத்தின் அனுமதி இன்றி அங்கு ஒரு செங்கல் கூட எடுக்க முடியாது என்பதுதான் எங்களின் உறைப்பான தார்மீக நிலைப்பாடு” என்றார். மேலும், தமிழக அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டம் நடைமுறையில் இருக்கும் போது, அரசுப் பள்ளி ஏழை மாணவர்களுக்கு மட்டும் 3-வது மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? இது அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பைப் பாதிக்கும் பாசிச அணுகுமுறையாகும்” என்று சாடினார். இறுதியாக, திமுக தனித்துவிடப்பட்டுள்ள சூழலில் வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “இதற்கெல்லாம் காலம் தான் தகுந்த பதில் சொல்லும்” என்று அரசியல் அனல் பறக்கத் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Advertisement

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement