கெயிலின் வரலாற்று சாதனையை உடைத்து சரித்திரம் படைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி!

0
4

தனியொரு வீரராக ஐபிஎல் தொடர்களில் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வது ஒன்றும் புதிதல்ல என்றாலும், தற்பொழுது கிரிக்கெட் உலகில் உருவாகியுள்ள புதுப்புயல் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம், உண்மையில் அவரை விண்ணிலிருந்து வந்த ஒரு புது அவதார கிரிக்கெட் வீரராகவே ஒட்டுமொத்த ரசிகர்களையும் நினைக்க வைத்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அசாத்திய பேட்டிங் திறமையால் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளருமான பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை அடியோடு துவம்சம் செய்து புதிய சரித்திரச் சாதனை படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியில் கம்மின்ஸ் வீசிய முதல் இரண்டு பந்துகளைச் சூர்யவன்ஷி நிதானமாகக் கையாண்டார். ஆனால், அடுத்த பந்துகளில் கம்மின்ஸ் தனது துல்லிய யார்க்கர் மற்றும் மெதுவான பந்துவீச்சில் துளியளவு பிசகினாலும், அதனை அப்படியே துரிதமாகக் கணித்து மைதானத்திற்கு வெளியே சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் சூர்யவன்ஷி. கம்மின்ஸ் வீசிய ஒரே ஓவரில் 4, 6, 6, 6 என அடுத்தடுத்து விளாசித் தள்ளிய இந்த 15 வயது சிறுவனின் அசாத்திய திறமை, ஆச்சரியத்தையும் கடந்த அதிசயமாக கிரிக்கெட் உலகில் பார்க்கப்படுகிறது. எதிரணிக்கு எப்படிக் களவியூகம் அமைப்பது என்ற கேள்வியையே அவர் தனது பேட்டிங் மூலம் உருவாக்கியுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளை வாரிக்குவித்தார். இதன் மூலம் வெறும் 17 பந்துகளிலேயே 92 ரன்களை அவர் விளாசியுள்ளார் என்பதே அவரது உண்மையான ஸ்ட்ரைக் ரேட்டை உணர்த்துகிறது.

ஐபிஎல் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கடந்த 2012-ஆம் ஆண்டு சீசனில் 59 சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெயில் தன் வசம் வைத்திருந்தார்.

நேற்றைய போட்டிக்கு முன்பாக 53 சிக்ஸர்களுடன் இருந்த வைபவ் சூர்யவன்ஷி, நேற்றைய இன்னிங்ஸில் அடித்த 12 சிக்ஸர்களின் மூலம் மொத்தம் 65 சிக்ஸர்களை எட்டி, கிறிஸ் கெயிலின் நீண்ட கால சாதனையை அக்குவேறு ஆணிவேறாக உடைத்து புதிய உச்சம் தொட்டுள்ளார். அதுவும் ஆட்டத்தின் முதல் 10 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே இந்தச் சாதனையை அவர் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யவன்ஷி, 242.85 என்ற அசாத்திய ஸ்ட்ரைக் ரேட்டுடன் மொத்தம் 680 ரன்களைக் குவித்து ரன் வேட்டையாடி வருகிறார்.

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அசாத்திய ஆட்டத்தைக் கண்டு வியந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “என்னுடைய புதிய விருப்பமான வீரர் வைபவ் தான்; அவரை தற்பொழுது வீழ்த்துவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை” என்று மனப்பூர்வமாகத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

இத்தனை நாட்களாக இந்திய கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர், வைபவ் சூர்யவன்ஷி பற்றி எதுவும் கூறவில்லையே என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மருந்தாக, சூர்யவன்ஷியைப் பாராட்டித் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ள பாராட்டு இதோ:

“வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் மிகவும் தனித்துவமாக உள்ளது. அதைவிடவும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், தன் கால்களை நோக்கி வரும் பந்துகளுக்கு இடம் உருவாக்குவதற்காக, அவர் தனது முன் காலை எவ்வளவு அழகாக நகர்த்துகிறார் என்பதுதான். இந்தச் சுதந்திரம்தான் அவர் அவ்வாறு மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் விளையாட அனுமதிக்கிறது. அந்த ஆட்டம் ஓர் அற்புதமான காட்சி விருந்து என்பதைத் தவிர வேறொன்றுமில்லை!”