கூடுவாஞ்சேரி நகராட்சியில் மின் திருட்டு நடைபெற்றதாக வெளியான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள தெரு மின் கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்பட்டதாகவும், கடந்த நான்கு மாதங்களாக இந்த முறையில் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அப்போதைய நகர மன்றத் தலைவர் MKD கார்த்திக் தலைமையில் கடந்த மார்ச் மாதம் அவசரமாக அலுவலகம் திறக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின்னர் மே மாத இறுதியில் நகராட்சிப் பொறுப்புத் தலைவர் லோகநாதன் தலைமையில் மக்கள் பயன்பாட்டிற்கு முறையாக கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய அலுவலகத்திற்கு மின்சாரத் துறை சார்பில் சிங்கிள் பேஸ் மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட ஏசி சாதனங்கள், 50க்கும் மேற்பட்ட கணினிகள் மற்றும் மடிக்கணினிகள், ஜெராக்ஸ் இயந்திரங்கள், ஏராளமான மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இதனால், அதிக மின் தேவையை சமாளிக்க 3-பேஸ் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் இணைப்பு கிடைக்காத நிலையில் நகராட்சி நிர்வாகம் மாற்று வழியைத் தேர்ந்தெடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அலுவலகத்திற்கு எதிரே சாலையோரத்தில் உள்ள தெரு மின் கம்பத்தில் இருந்து நேரடியாக மின் ஒயர் கொண்டு வந்து, கொக்கி மூலம் மின்சாரம் எடுத்து நகராட்சி அலுவலகத்தில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நகராட்சிப் பொறுப்புத் தலைவர் லோகநாதனிடம் கேள்வி எழுப்பியபோது, நகராட்சி அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். ஆனால், சம்பவ இடத்தில் ஜெனரேட்டர் இயங்கவில்லை என்றும், தெரு மின் கம்பத்தில் இருந்து மின் ஒயர் நகராட்சி அலுவலகத்திற்குள் செல்வது தெளிவாகத் தெரிகிறது என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சி அலுவலகத்திற்கு எதிரிலேயே வெளிப்படையாக மின் திருட்டு நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை ஊழியர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் பின்னணியில் முறைகேடு அல்லது லஞ்சம் நடைபெற்றதா? என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து, நகராட்சிப் பொறுப்புத் தலைவர் லோகநாதன், பொறுப்பு ஆணையர் லதா மற்றும் மின் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்படும் மின்சாரத் துறை ஊழியர்கள் மீது துறைரீதியான மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கடந்த நான்கு மாதங்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு, அதற்குரிய கட்டணம் மற்றும் அபராதத் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
#கூடுவாஞ்சேரிநகராட்சியில்மின்திருட்டு #கூடுவாஞ்சேரி #நகராட்சி #மின்திருட்டு #மின்சாரம்திருட்டு #மின்கம்பம் #கொக்கிபோட்டுமின்சாரம் #நகராட்சிஅலுவலகம் #செங்கல்பட்டு #மின்சாரத்துறை #மின்இணைப்பு #3பேஸ்மின் #சமூகஆர்வலர்கள் #பொதுமக்கள்கோரிக்கை #Kuduvanchery #KuduvancheryMunicipality #ElectricityTheft #PowerTheft #IllegalElectricity #MunicipalityOffice #ElectricityDepartment #PowerConnection #ThreePhasePower #ElectricityPole #IllegalConnection #Chengalpattu #TamilNaduNews #LocalNews #CivicIssues #ElectricityTheftCase













