Advertisement
,

திருமணமான 4 மாதத்தில் பெண் மரணம்! – கணவரைக் கைது செய்யக் கோரி ஜிஎஸ்டி சாலையில் மறியல்

திருமணமான 4 மாதத்தில் பெண் மரணம் விவகாரத்தில், மர்மம் இருப்பதாகக் குற்றம்சாட்டி, அவரது கணவர் தீபக் குமாரைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே ஜிஎஸ்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர் (RDO) விசாரணை நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அழகூர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் தீபக் குமார் (27). எல்.எல்.பி. படித்துள்ள இவர், வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இவருக்கும், சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் மகள் ராஜேஸ்வரிக்கும் (24) கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

Advertisement

இந்த நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் ராஜேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக, அவரது தாயாருக்கு மாமனார் ராமமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, ராஜேஸ்வரியின் உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு ராஜேஸ்வரியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற சேந்தமங்கலம் போலீசார், ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, ராஜேஸ்வரியின் கணவர் தீபக் குமார் தனது செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜேஸ்வரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், ராஜேஸ்வரிக்கு அவரது கணவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும், மாதவிடாய் காலத்திலும் தொந்தரவு கொடுத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆடி மாதத்தில் ராஜேஸ்வரி தாய் வீட்டில் இருந்தபோது, மீண்டும் கணவர் வீட்டுக்கு வராவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதாக தீபக் குமார் மிரட்டியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது கணவர் தலைமறைவானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ராஜேஸ்வரியை அவரது கணவரே கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டி, தீபக் குமாரைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து, ராஜேஸ்வரியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்புள்ள செங்கல்பட்டு – மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தலைமறைவாக உள்ள தீபக் குமாரைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசுவதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் பெண் உயிரிழந்துள்ளதால், இந்தச் சம்பவம் தொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேஸ்வரியின் மரணத்திற்கான உண்மையான காரணம் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும்.

#ராஜேஸ்வரிமரணம் #அழகூர்கிராமம் #ஸ்ரீபெரும்புதூர் #பெண்மரணம் #கணவரைக்கைதுசெய்யக்கோரி #ஜிஎஸ்டிசாலை #சாலைமறியல் #செங்கல்பட்டுஅரசுமருத்துவமனை #காவல்துறை #RDOவிசாரணை #திருமணமான4மாதம் #குடும்பபிரச்சினை #உறவினர்கள்போராட்டம் #செங்கல்பட்டு #RajeshwariDeath #AlagurVillage #Sriperumbudur #WomanDeathCase #HusbandArrestDemand #GSTRoad #RoadProtest #ChengalpattuGovernmentHospital #PoliceInvestigation #RDOInquiry #NewlyMarriedWoman #FamilyDispute #Chengalpattu #TamilNaduNews #CrimeNews #TamilNews

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement