கிளாம்பாக்கத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான காரணம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். நீண்ட தூரம் செல்லும் பயணிகள் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் தங்குவதால் கூட்டம் அதிகரிப்பதாகவும், இதைக் கட்டுப்படுத்த 500 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வார விடுமுறை மற்றும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகளை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, நாகப்பட்டினம், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அரசு பேருந்தில் ஏறி, பயணிகளிடம் நேரடியாகப் பேசி வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தங்களது பயணம் சிரமமின்றி இருப்பதாகப் பயணிகள் தெரிவித்த நிலையில், அவர்களைத் தம்ஸ் அப் காட்டுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பண்டிகைக் காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் சிரமமின்றிப் பயணம் மேற்கொள்ளவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கு முன்பு பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று சில பயணிகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நெட்வொர்க் வசதி குறைவாக இருப்பதாகப் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனைச் சரிசெய்யும் வகையில் தற்காலிக நெட்வொர்க் வசதியை மேம்படுத்தும் நடவடிக்கையாக டவர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் பேருந்து நிலையத்திலேயே நீண்ட நேரம் தங்குவதால் மற்ற பயணிகளுடனும் சேர்ந்து கூட்ட நெரிசல் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார். இதையடுத்து, பயணிகள் அமர்வதற்காக சுமார் 500 இருக்கைகள் அமைக்கப்பட்டு, அவர்கள் ஆங்காங்கே அமர வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகரப் பேருந்துகள் மூலம் கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில், கிளாம்பாக்கம் மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட அறிவிப்புச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில் பேருந்துகளின் வழித்தடங்கள் மற்றும் அவை புறப்படும் நடைமேடைகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
பேருந்து சேவைகள் குறித்து பேசிய அமைச்சர், சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,191 பேருந்துகளுடன், பண்டிகைக் காலத்திற்காக 1,790 சிறப்புப் பேருந்துகளும், தனியார் பேருந்துகள் மூலம் 727 பேருந்துகளும் என மொத்தம் 4,708 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், கூடுதலாக 2,085 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தேவைக்கேற்ப அடுத்த இரண்டு நாட்களில் அவை இயக்கப்படும் என்றும் கூறினார்.
தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். இதுவரை தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகத் தனக்குப் புகார் எதுவும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
#கிளாம்பாக்கத்தில்_கூட்டநெரிசல் #கிளாம்பாக்கம் #மறைமலைநகர் #தமிழன்பார்த்திபன் #போக்குவரத்துத்துறை #ஆயுதபூஜை #சரஸ்வதிபூஜை #தொடர்விடுமுறை #சிறப்புபேருந்துகள் #பயணிகள்கூட்டம் #500இருக்கைகள் #4708பேருந்துகள் #2085பேருந்துகள் #நாகப்பட்டினம் #கும்பகோணம் #தஞ்சாவூர் #Kilambakkam #CrowdCongestion #TamilanParthiban #TransportDepartment #AyudhaPooja #SaraswatiPooja #HolidayRush #SpecialBuses #PassengerCrowd #4708Buses #BusFacilities #MaraimalaiNagar #Nagapattinam #Kumbakonam #Thanjavur #TamilNaduTransport #ChennaiNews













