Advertisement

பாதாள சாக்கடை பணியால் உடைந்த குடிநீர் குழாய்: வேதாசலம் நகரில் நீர் வீண்

செங்கல்பட்டு வேதாசலம் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணியின் போது குடிநீர் குழாய் உடைந்ததால், பாலாற்று குடிநீர் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட வேதாசலம் நகரில் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் பாலாற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அழகேசன் சாலையில் சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது குடிநீர் குழாய் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதன் காரணமாக குடிநீர் தொடர்ந்து வெளியேறி வீணாகி வருகிறது. ஏற்கனவே கோடை வெப்பம் அதிகரித்து குடிநீர் தேவை அதிகமாக உள்ள நிலையில், குடிநீர் வீணாகுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் மக்கள் கூறுகையில், பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் போது நகராட்சி ஊழியர்களின் மேற்பார்வையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தும், அது முறையாக பின்பற்றப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இதன் விளைவாக பல இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து வருகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

குடிநீர் குழாய் உடைந்ததால் வேதாசலம் நகரின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, அழகேசன் சாலையில் உடைந்துள்ள குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து, வீணாகும் பாலாற்று குடிநீரை பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement