Advertisement

மழைக்காலத்தில் விறுவிறுப்பாகும் ‘ஈசல்’ விற்பனை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், புரதச்சத்து நிறைந்ததாக கருதப்படும் ஈசல் விற்பனை சூடுபிடித்துள்ளது.

🐜 மழைக்காலத்தில் வெளியே வரும் ஈசல்

மழைக்காலங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகளை சுற்றி மொய்க்கும் பூச்சிகளில் ஈசல் முக்கியமானதாக உள்ளது. ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் இதன் உற்பத்தி தொடங்கும். புற்றுகளில் வாழும் ஈசல்கள், அங்குள்ள தாவர வகைகளை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன. மழைக்காலங்களில் சூரிய உதய நேரத்திலும் புற்றுகளை விட்டு வெளியே வரும் இவை, காற்றை எதிர்கொள்ள முடியாத தன்மை கொண்டவை. இதனால் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இவற்றை அதிகளவில் காண முடிகிறது.

Advertisement

🍽️ நொறுக்குத்தீனியாக விரும்பி சாப்பிடும் மக்கள்

புரதச்சத்து நிறைந்தது என்பதால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஈசலை மாலை நேர நொறுக்குத்தீனியாக மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் பாரம்பரிய உணவாக இது பார்க்கப்படுகிறது. ஈசலை சேகரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளும் மழைக்காலத்தில் அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாலை நேரங்களில் ஈசல் விற்பனை செய்யும் இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

💰 ஒரு படி ரூ.350 வரை விற்பனை

இதுகுறித்து ஈசல் வியாபாரி பச்சையப்பன் (48) கூறுகையில், கிராம மக்களால் ஈசல் மருத்துவ குணம் நிறைந்ததாக நம்பப்படுகிறது. இதனால் ஒரு படி ஈசல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஈசலை நன்றாக வறுத்து, அதனுடன் அரிசி, பொறி, மஞ்சள் உள்ளிட்டவற்றை சேர்த்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகின்றனர். செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலர் குடும்பத்துடன் வசித்து வருவதால், ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் இந்த பாரம்பரிய தின்பண்டத்தை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement