Advertisement

கூடுவாஞ்சேரி அருகே உயர் மின்னழுத்தம்: மின்சாதனங்கள் சேதம்

காயரம்பேடு ஊராட்சியில் இடி, மின்னலுடன் பெய்த மழையின்போது ஏற்பட்ட உயர் மின்னழுத்தத்தால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ், இன்வெர்ட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் சேதமடைந்தன.

⚡ திடீர் உயர் மின்னழுத்தத்தால் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சியில் 9 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் காயரம்பேடு பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது 4-வது வார்டுக்குட்பட்ட கணேஷ் நகர் பகுதியில் திடீரென உயர் மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டு, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்தடை ஏற்பட்டது.

Advertisement

🔥 வீட்டு உபயோக சாதனங்கள் எரிந்து சேதம்

உயர் மின்னழுத்தம் காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ், இன்வெர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்சாதனங்கள் எரிந்து சேதமடைந்தன. சில வீடுகளில் ஏ.சி., உள்ளிட்ட அதிக விலை கொண்ட மின்சாதனங்களும் பழுதாகியதால், பொதுமக்களுக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னையால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🛡️ மின்சாதனங்களை பாதுகாக்க அறிவுரை

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறுகையில், மின்னல் மூலம் நொடிப்பொழுதில் உருவாகும் உயர் மின்னழுத்தத்திலிருந்து பாதுகாக்க மின்மாற்றிகளில் ‘லைட்னிங் அரெஸ்ட்’ என்ற பாதுகாப்பு சாதனம் பொருத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மின்மாற்றியில் அந்த சாதனம் செயல்படாமல் இருந்திருக்கலாம். இதன் காரணமாக இடி, மின்னல் மூலம் உருவான உயர் மின்னழுத்தம் வீடுகளின் மின்சாதனங்களை பாதித்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, இடி, மின்னல் நேரங்களில் மின்சாதனங்களை சுவிட்ச் ஆப் செய்வதுடன், மின் இணைப்பின் பிளக்குகளையும் அகற்றுவது பாதுகாப்பானது என அவர் தெரிவித்தார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement