உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தகுதியுள்ள முஸ்லிம் சமுதாய பணியாளர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔹 8 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவுத்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடுசெய்தல் மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 8 முக்கிய நலன்கள் அடங்கும். இத்திட்டங்கள் மத மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் பணியாளர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
🔹 யார் பதிவு செய்யலாம்?
முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இந்நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதியுடையவர்கள். பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள் இதில் சேரலாம். மேலும் தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷிர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்களில் பணிபுரியும் முஜாவர்கள் உள்ளிட்ட பணியாளர்களும் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெறலாம். உறுப்பினர் பதிவு மற்றும் உதவித்தொகை விண்ணப்பங்களை எளிதாக்குவதற்காக தனி இணையதளம் www.uwb.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.












